Tuesday, August 31, 2010

கூத்தாடிகளும் இளிச்ச வாயன்களும்

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. ஒரு சில உண்மைகளை எவ்வளவு எடுத்து சொன்னாலும் சில தமிழர்களுக்கு புரியாது என்றாலும் சொல்லாமல் இருந்தால் அது ஒரு குற்ற உணர்ச்சியாக உறுத்தி கொண்டே இருக்கின்றது. சொல்வதால் எதாவது மாற போகிறதா என்று கேட்டால் இல்லை என்று எதார்த்தம் செருப்பால் அடித்தாலும் சொல்லவே இல்லை என்றால் அது இன்னும் கேவலமான செயலாக தோன்றியது.

சில நாட்களுக்கு முன்னர் தமிழினத் தலைவர் , கலைஞர் , டாக்டர் கலைஞர் ,முதலமைச்சர் கலைஞர் ....(இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.. வாலி,வைரமுத்து,பா விஜய் போன்றோர்கள் இவர்கள் தமிழ் படித்ததே கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி பேர் வைக்கத்தான் என்கிற அளவுக்கு பெயர் சூட்டுகின்றனர்) ....இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது எனக்கு "இம்சை அரசன்" படத்தில் வரும் அரசவை புலவர்களே நினைவுக்கு வருகின்றனர். சரி அவர்கள் பெயர் வைப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நாளை இன்னொரு திருடன் வந்தால் அவனுக்கும் மேடை போட்டு பெயர் வைக்கும் அளவிற்கு தமிழ் புலமை படைத்தவர்கள் நம் தமிழ் கவிஞர்கள். இது கலைஞருக்கும் தெரியும் என்றாலும் புகழ் போதையில் அவர் புளகாங்கிதம் அடைகிறாரோ என்னவோ..

உலகில் ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் சினிமா படங்கள் தயாரித்தாலும் சினிமா நாயகர்களை நிஜத்திலும் கடவுளாகவும் ,தலைவனாகவும் பார்க்கும் இளிச்ச வாயன் பட்டியலில் முதல் இடம் நம் அண்டை மாநிலமான ஆந்திராவையும் நாங்கள் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்று மார் தட்டுவது நம் தமிழர் இனமே.


இதற்கு ஒரு பெரிய உதாரணம் கடந்த நாற்பது ஆண்டுகளில் சினிமா துறையை சாராமல் முதலமைச்சர் ஆனவர் ஒ.பண்ணீர் செல்வம் மட்டுமே. அவர் எப்படி ஆனார் என்பது ஜனநாயகத்தின் கேலி கூத்து.


எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கூத்தாடிகள் கூட்டமாக சென்று வாழ்த்துவதும் ,மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதும்,திருட்டு விசிடி ஒழிப்பு பற்றி பேசுகிறோம் என்றும் முதலமைச்சர் வீட்டு வாசலில் தேவுடு காப்பது இவர்களுக்கு கை வந்த கலை. இவர்களில் இன்னும் சிலர் இரண்டு கட்சிகளின் விரோதத்தையும் சம்பாதித்து கொள்ளாமல் இருவரையும் அடிக்கடி சந்தித்து வாளாட்டி விட்டு வருவார்கள்.

இதற்கு பதிலாக சில பிஸ்கட் துண்டுகளை அரசியல் கட்சிகளும் போடுவது வாடிக்கை. சில வருடங்களுக்கு முன்பு அரங்கேறிய திட்டம் தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு. இந்த வரிவிலக்கு படத்தின் தரத்தையோ அது மக்களுக்கு சொல்லும் கருத்தை வைத்தோ கிடையாது. படத்தின் பெயர் தமிழில் இருந்தால் அதுவே போதுமானது. இது தமிழை வளர்க்கும் ஒரு திட்டமாக அரசு கருதுகிறது.

படங்களில் எவ்வளவு இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் அதை தணிக்கை குழுவோ அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை. இதை பல முறை கேலியும் செய்துள்ளவர் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி சின்ன கலைவாணர் என்று பேரும் பெற்றவர். தமிழை நடிகைகளின் புட்டத்தை காண்பித்து வளர்த்து விடலாம் என்பது தமிழ் படித்த சான்றோர்களின் கருத்து. விவசாயிகளின் பயிரை காப்பாற்ற தேவையான உரங்களின் வரியை குறைக்க முடியாத அரசாங்கம் தமிழில் பெயர் வைக்கபட்டுள்ள படத்திற்கு கொடுக்கின்றது. இதில் ரத்தம் கொதிக்கும் நிகழ்ச்சி என்ன வென்றால் இவ்வாறு வரிவிலக்கு அளிக்கப்பட்ட ஒரு படம் "சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு". இதை எல்லாரும் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர கேள்வி கேட்க முடியாது.

சமீபத்தில் நடந்த இன்னொரு கொடுமை நலிவடைந்த கலைஞர்களுக்கு வீடு வழங்கும் விழா. எல்லா முன்னணி நடிகர்களும் சராசரியாக ஆறு கோடி ருபாய் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் துறையை சேர்ந்த நலிவடைந்த கலைஞர்களுக்கு வீடு கட்ட வரி செலுத்துவோரின் பிச்சை தேவை படுகிறது. இந்த கொடுமை உலகத்திலே முதல் முறையாக தமிழ் நாட்டில் அரங்கேறி உள்ளது.

தமிழன் சினிமா போதையில் மூழ்கி கொண்டிருக்கிறான். வரும் காலம் நம்மை பார்த்து இப்பொழுதே சிரிக்க துவங்கி விட்டது. இன்று நாம் செய்யும் சின்ன தவறுகள் நாளை நம் சந்ததியினரை அடிமையாக்கி விடும்.

தமிழர்களே சினிமாவை சினிமாவாக பாருங்கள்.

உங்களுக்காக ஒரு யு டியூப் பதிவு.
http://www.youtube.com/watch?v=jUouWbkep1c&feature=related